தனியார் பள்ளிகளின் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் 'திடீர்' சாவு

தனியார் பள்ளிகளின் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திடீரென இறந்தார்.

Update: 2023-04-03 19:45 GMT

பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 58). நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த இவர், பிளஸ்-2 வகுப்புக்கு நடந்த கடைசி தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மதியம் அவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று மதிய உணவை சாப்பிட்டார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், அதனை தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் சண்முகசுந்தரத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெரம்பலூா் மாவட்ட கல்வி அலுவலர்கள், ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகசுந்தரத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு வந்த அவரது குடும்பத்தினர், சண்முகசுந்தரத்தின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் சண்முகசுந்தரத்தின் உடல் அவர் வசித்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பண்ணப்பட்டு கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்