பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாக சிறுவர் அறிவியல் பூங்கா சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாக சிறுவர் அறிவியல் பூங்கா சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-14 18:27 GMT

விளையாட்டு-அறிவியல் உபகரணங்கள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதி ரூ.27½ லட்சம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதி ரூ.6 லட்சத்து 10 ஆயிரம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பொது நிதிகளான தலா ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.41 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிறுவர் பூங்கா தோட்டம் அமைக்கப்பட்டு, கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி திறக்கப்பட்டது.

இந்த சிறுவர் பூங்காவில் சிறுவர்-சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அப்போது பூங்காவிற்குள் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு சிறுவர் பூங்கா அறிவியல் பூங்காவாக மாற்றப்பட்டது. இதனால் பூங்காவில் அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

கூட்டம் அலைமோதுகிறது

பின்னர் பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ.2-ம், பெரியவர்களுக்கு ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பெரம்பலூர் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால் சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு தான் மாலை நேரத்தில் பெரம்பலூர் பொதுமக்கள் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தற்போது தினமும் பூங்காவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூங்காவில் கூட்டம் அலைமோதியது.

ஆனால் சிறுவர் அறிவியல் பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் உபகரணங்களும் பெரும்பாலானவை சேதமடைந்து பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

புதர்மண்டி கிடக்கிறது

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சாகுல் ஹமீது:- எனது மகளுக்கு ஒரே பொழுது போக்கு இடம் என்றால் இந்த பூங்கா தான். இதனால் அவளை அழைத்து கொண்டு தினமும் இந்த பூங்காவிற்கு வந்து விடுவேன். அவள் பூங்காவில் உற்சாகமாக விளையாடுவதை காண்பது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. பூங்கா தூய்மையாக தான் இருக்கிறது. ஆனால் சுத்தமான குடிநீர் வசதி இல்லை. அருகே உள்ள கழிவறையும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மின் விளக்குகளும் போதிய அளவு இல்லை. சூரிய ஒளி (சோலார்) மின் விளக்குகள் எாிவதில்லை. மழை பெய்தால் கூட ஒதுங்குவதற்கு நிழற்குடை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் அறிவியல் பூங்காவில் போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மின் விளக்குகள் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுத்தமான குடிநீர் இல்லை

ஆலத்தூர் தாலுகா இரூரை சேர்ந்த வசந்தா:- பள்ளி விடுமுறைகளில் எனது பேரக்குழந்தைகளை இந்த பூங்காவிற்கு அழைத்து வருவது வழக்கம். ஆனால் பூங்காவில் சுத்தமான குடிநீர் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களையும், அறிவியல் உபகரணங்களையும் அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும். கழிவறை வசதியும் ஏற்படுத்த வேண்டும். இருக்கை வசதி (ஸ்டோன் பெஞ்சு) சேதமடைந்துள்ளது. மேலும் பூங்காவை சுற்றி பூச்செடிகளை வளர்க்க வேண்டும். செயற்கை நீரூற்றுகள் ஏற்படுத்த வேண்டும். பூங்காவை நன்றாக பராமரித்தால் வருகை தரூபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூங்கா காலையில் 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும். ஆனால் தற்போது காலை நேரத்தில் செயல்படுவதில்லை. இதனால் காலை நேரத்தில் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

பராமரிப்பின்றி கழிவறை

பெரம்பலூர்-விளாமுத்தூர் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார்:- நான் எனது மகளுடன் இந்த பூங்காவிற்கு வருவது வழக்கம். இந்த பூங்காவில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விளையாட்டு உபகரணங்களில் விளையாட வைத்து அழகு பார்ப்பார்கள். மேலும் அவர்கள் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள். சிலர் தங்களது உறவினர்களுடன் வந்து மனம் விட்டு பேசி பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர். ஆனால் பூங்காவில் பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. அதில் அறிவியல் உபகரணங்களை விளக்கும் தகவல் பலகையின் தகரம் பெயர்ந்துள்ளது. இதனால் விளையாடும் சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அதனை சரி செய்ய வேண்டும். சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை. மேலும் அருகே உள்ள கழிவறை பராமரிப்பின்றி காணப்படுகிறது. அந்த கழிவறையை பராமரித்தால் கலெக்டர் அலுவலகத்திற்கும் பொதுமக்களும், பூங்காவிற்கும் வருபவர்களும் பயன்படுத்தலாம். இதனால் பூங்காவிற்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுவதால் சிறிது நேரத்திலேயே திரும்பி சென்று விடுகின்றனர்.

கவலையாக உள்ளது

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர் நிக்ரித்:- நான் இந்த பூங்காவிற்கு வந்து விளையாடி விட்டு செல்வேன். ஆனால் தற்போது இந்த பூங்காவில் தலைவணங்கா மகாராஜா பொம்மை சேதமடைந்த ஓரமாக கிடக்கிறது கவலையாக உள்ளது. சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களையும், அறிவியல் உபகரணங்களை புதிதாக மாற்றினால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தற்போது செயல்படும் விளையாட்டு உபகரணங்களும் கீச்,கீச் என்ற சத்தம் எழுப்புவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. சிறுவர் அறிவியல் பூங்காவை பராமரித்தால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகளும் சுற்றுலாவாக வந்து செல்வார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்