மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

Update: 2023-09-02 22:43 GMT

மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மரவள்ளி கிழங்கு

ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணப்பயிராக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி கிழங்கு உற்பத்தி, தரம், வரத்து குறைந்து விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் வரத்து அதிகரித்துள்ளதால் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, தாளவாடி ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 3, 4 ஆண்டுகளாக மாவுப்பூச்சி தாக்குதல் காரணமாக மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறைந்தது. இருப்பினும், தற்போது ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களிலும், பிற மாவட்டங்களில் கருமந்துறை, கொல்லிமலை போன்ற இடங்களிலும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

விலை வீழ்ச்சி

தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யப்பட்டு வருவதால் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு டன் மரவள்ளி கிழங்கின் விலை படிப்படியாக குறைந்து நேற்று ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதாவது ஒரு வாரத்துக்குள் ரூ.3 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் ரூ.6 ஆயிரத்து 300-க்கு விற்பனையான 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை தற்போது ரூ.800 விலை குறைந்து ரூ.5 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.500 விலை குறைந்து, ரூ.4 ஆயிரத்து 500-க்கு விற்கப்படுகிறது.

எனினும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், மரவள்ளி கிழங்குக்கான தேவை அதிகரிக்கும். எனவே வரும் காலங்களில் மரவள்ளி கிழங்கின் விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்