குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2023-04-21 11:50 GMT

பொங்கலூர்

பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை அடுத்த பொள்ளாச்சி சாலையில் சின்னூர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 20 நாட்களாக அத்திக்கடவு குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னூர் பிரிவு அருகே பொள்ளாச்சி சாலையில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பல்லடம் ஒன்றிய ஆணையாளர் மகேஸ்வரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் அத்திக்கடவு குடிநீர் வாரம் ஒரு முறை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும், இனிமேல் இதுபோன்று பிரச்சினைகள் வராமல் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியல் போராட்டத்தால் பல்லடம்- பொள்ளாச்சி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Tags:    

மேலும் செய்திகள்