ராமேசுவரம் கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை போராட்டம்
ராமேசுவரம் கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை போராட்டம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை போராட்டம் நடந்தது.
போராட்டம்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், ராமேசுவரம் கோவிலில் ஆகம விதிகள், மரபுகளை மீறி செயல்பட்டு வரும் கோவில் இணை ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து கோவிலை வருமானம் ஈட்டும் நோக்கில் மாற்றுவதை கண்டித்தும், கோவில் பிரகாரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதை அகற்ற கோரியும், ராமேசுவரத்தில் நேற்று மக்கள் பாதுகாப்பு பேரவையின் சார்பில் போராட்டம் நடந்தது.
மேலும், பக்தர்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், ஓய்விடம், கழிவறை வசதிகள் அமைத்து தர வேண்டும், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தரிசனம் செய்ய தனி பாதை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
இதையொட்டி 200-க்கும் மேற்பட்டோர் தேவஸ்தான அலுவலகம் முன்பு நின்று கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் வாசல் முன்பு ஏராளமான தடுப்பு கம்பிகளை அமைத்து உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கிழக்கு ரத வீதி சாலையில் அமர்ந்து மக்கள் பாதுகாப்பு பேரவையினர் கோவில் இணை ஆணையரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்ட குழுவினருடன் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி, தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், அப்துல் ஜபார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். தொடர்ந்து ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக 7 பெண்கள் உள்பட 189 பேரை போலீசார் கைது செய்தனர்.