சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்
சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக தீர்மானம்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு, செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் சில தீர்மானங்கள் வருமாறு:-
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசாரம் வெற்றிகரமாக நிகழ பங்களிப்பாற்றிய தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரசிகர்கள், பொதுமக்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுதல்கள் தெரிவிக்கப்படுகிறது.
* 2018-ம் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட போது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அருணாச்சலம். மீண்டும் நமது கட்சியில் இணைந்துள்ள அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கட்சியின் அனைத்து கட்டமைப்பு பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படுகிறது. அவர், கமல்ஹாசனின் நேரடி ஆணைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்வார்.
* 'கமல் பண்பாட்டு மய்யம்' என்ற லாப நோக்கமற்ற, அரசியல் நோக்கமற்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ள கமல்ஹாசனுக்கு நிர்வாக மற்றும் செயற்குழு பாராட்டுதல்களை தெரிவிக்கிறது.
* 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநிலம் முழுவதும் பூத் கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும். கமல்ஹாசன் விரைவில் மேற்கொள்ள உள்ள கட்சி மறுசீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல் திறன் அடிப்படையில் இருக்கும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.