ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 247 மனுக்கள் பெறப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 247 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.10,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நெமிலி ஒன்றியம் கணபதிபுரத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.