2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்வம் காட்டாத மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற ஆர்வம் காட்டாமல் மக்கள் உள்ளனர். வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 17:42 GMT

2 ஆயிரம் ரூபாய் நோட்டு

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 19-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மே மாதம் 23-ந் தேதி முதல் மாற்றிக்கொள்ளலாம் எனவும், ஒருவர் ரூ.20 ஆயிரம் வரை ஒரே நேரத்தில் மாற்றலாம் எனவும், வைப்பு தொகையாக செலுத்த வரம்பு எதுவும் இல்லை எனவும், செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் மாற்றலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மக்கள் மாற்ற தொடங்கினர்.

சிறப்பு கவுண்ட்டர்கள்

புதுக்கோட்டை நகரப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பலர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்திருந்தனர். இதில் அவர்களுக்கு தனி படிவம் வழங்கி நிரப்ப அறிவுறுத்தப்பட்டது. வங்கி கணக்கில் வைப்பு தொகையாக செலுத்தியவர்களுக்கு வழக்கமான படிவம் வழங்கப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சிறப்பு கவுண்ட்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றினர். இதில் ஒரு சில வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் அடையாள அட்டை எதுவும் கேட்கவில்லை. சில வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் தெரிவிக்க அறிவுறுத்தினர். இதனால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்தனர். எந்தவித அடையாள அட்டையும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில வங்கிகளில் இதுபோன்ற செயலால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கூட்டம் இல்லை

2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாற்றுதல் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, ``பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இருந்த கூட்டம் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு இல்லை. குறைந்த அளவு வாடிக்கையாளர்களே வங்கிக்கு வருகின்றனர்.

பணத்தை மாற்றிக்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் முதல் நாளில் கூட்டம் அதிகம் இல்லை. இருப்பினும் வருகிறவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்கும் வகையில் சிறப்பு கவுண்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.எம். எந்திரத்திலும் வைப்பு தொகையாக செலுத்த வரம்பு எதுவும் இல்லை'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்