பழனி கடைவீதிகளில் வெள்ளமென திரண்ட மக்கள்
தீபாவளியை முன்னிட்டு பழனி கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதற்கு வெள்ளமென மக்கள் திரண்டனர்.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், பலகாரம் செய்து உண்டு மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் சுற்று வட்டார பகுதி மக்கள் பழனி நகர் பகுதியில் உள்ள துணிக்கடைகள், பலசரக்கு கடைகளில் பொருட்கள் வாங்க அதிக அளவில் திரண்டனர். இதனால் முக்கிய கடைவீதிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
குறிப்பாக ஆர்.எப்.ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஏராளமான துணிக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். எனினும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.