பொருட்கள் வாங்க கரூர் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க கரூர் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-01-14 18:30 GMT

மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட கரூர் மாவட்டத்தில் மக்கள் தயாராக உள்ளனர். பல இடங்களில் சமுதாய பொங்கல், சமத்துவ பொங்கல் கடந்த ஓரிரு நாட்களாக கொண்டாடப்பட்டன. வீடுகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளை சுத்தம் செய்து பொதுமக்கள் தயாராக வைத்துள்ளனர்.

இந்தநிலையில் கரூர் உழவர் சந்தை, மார்க்கெட், தாந்தோணிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கரும்பு, காய்கறிகள், மஞ்சள் குலை,தேங்காய், வாழைப்பழம், பொருட்களை வாங்கி சென்றனர். பண்டிகையையொட்டி பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நொய்யல்

நொய்யல், புன்னம் சத்திரம், காகிதபுரம் ,புகழூர் நகராட்சி பகுதிகள், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையொட்டி செங்கரும்பு, மஞ்சள் தலை போன்றவற்றின் விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும், வீடுகள், விவசாய தோட்டங்கள், விவசாய பம்பு செட்டுகள், மாட்டுத் தொழுவங்கள், தொழிற்சாலைகள், பல்வேறு வகையான கடைகள், பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு நான்கு பக்கங்களிலும் பூளப்பூ , ஆவாரம் பூவுடன் கொண்ட செடி, வேப்பிலை தலை ஆகியவற்றை வைத்து கட்டுவார்கள் அதனால் ஏராளமான பூளப்பூ, ஆவாரம்பூ செடி ,வேப்பிலைகள் தேவைப்பட்டதால் அதன் விற்பனையும் நடந்தது. கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

குளித்தலை-தோகைமலை

இதேபோல் குளித்தலை உழவர் சந்தையில், பொங்கல் பானையில் கட்டுவதற்காக பொதுமக்கள் மஞ்சள் கொத்துகள் மற்றும் பூஜையில் வைப்பதற்காக காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர். மேலும், கடைவீதிகளில் வீடுகளில் வைப்பதற்காக ஆவாரம் பூவுடன் சேர்த்து கட்டப்பட்ட பூளை பூவினை அதிகளவில் வாங்கி சென்றனர்.

இதேபோல் தோகைமலை கடைவீதிகளில் கரும்பு உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்