பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
நம்பாலக்கோட்டை-மஞ்சமூலா இடையே பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு செல்லும் சாலையில் நம்பாலக்கோட்டை பகுதி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற வேட்டைக்கொருமகன் கோவில் மற்றும் சிவன்மலை உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி உள்பட முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நம்பாலக்கோட்டை, மஞ்சமூலா, கில்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் நம்பாலக்கோட்டையில் இருந்து மஞ்சமூலா, கில்லூர் உள்பட பல்வேறு பகுதிக்கு சாலை செல்கிறது. மேலும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்பட விளைநிலங்கள் உள்ளதால் பச்சை தேயிலை மூட்டைகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர பள்ளிக்கூட மாணவ- மாணவிகளின் வாகனங்களும் செல்கிறது.
இந்தநிலையில் நம்பாலக்கோட்டையில் இருந்து மஞ்சமூலா பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.