ஆரணி அருகே செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலைமறியல்

ஆரணி அருகே தனியார் இடத்தில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-26 21:53 GMT

ஆரணி,

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அரிகரன் நகரில் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமாக காலி இடம் உள்ளது. இவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க பன்னீர்செல்வம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன்படி செல்போன் டவர் அமைப்பதற்காக அந்த இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர்உள்ளதாகவும், அதன் மூலம் வீடுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் ராஜி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைடுத்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அங்கு ெசல்போன் டவர் அமைக்க தடைவிதித்தனர்.

இது சம்பந்தமாக பொதுமக்களிடமும் தெரிவித்து சாலை மறியல் செய்யக்கூடாது எதுவாக இருந்தாலும் மனு அளியுங்கள் என்று கூறி சமரசம் செய்து அவர்களை கலைந்து செல்ல செய்தனர்.

மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை சரி செய்யும்பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்