குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குளித்தலை அருகே உள்ள திருச்சாப்பூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2023-04-22 18:30 GMT

சாலை மறியல்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட திருச்சாப்பூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க அப்பகுதியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம் மேல்நிலை தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின் மோட்டார் பழுதடைந்து கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறையும் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திருச்சாப்பூர் பஸ் நிறுத்தத்தில் பெட்டவாய்த்தலை-நங்கவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி, நங்கவரம் வருவாய் ஆய்வாளர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்