நாகையில், மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் நாகையில் மீன்கள் வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. மீன் வாங்குவதற்காக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர்.;

Update:2023-06-19 00:45 IST

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் நாகையில் மீன்கள் வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. மீன் வாங்குவதற்காக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர்.

மீன்பிடி தடைக்காலம்

வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.

மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பராமரிக்கும் வேலைகளை தடைக்காலத்தில் நாகை மீனவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

கடலுக்கு சென்றனர்

தடைக்காலம் முடிவடைந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 15-ந் தேதி அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை 3 மணி முதல் கரை திரும்ப தொடங்கினர். தடைக்காலத்தில் மீன்கள் மலிவாக கிடைக்காமல் அசைவப்பிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர்.

தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்வது அசைவப்பிரியர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மீன் வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் மீன் வாங்குவதற்காக நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதலே கூட்டம், கூட்டமாக திரண்டனர்.

கொட்டும் மழையையும்...

நாகை பகுதியில் அதிகாலையில் மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடையை பிடித்தபடி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கி சென்றனர். கடந்த 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை நேற்று சற்று குறைந்து காணப்பட்டது.

விலை குறைந்து இருந்ததால் அதிகளவில் மீன்களை வாங்க முடிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் விற்பனை சூடுபிடித்துள்ளதால் மீனவர்கள் மட்டுமின்றி, கருவாடு வியாபாரிகள், மீன் விற்பனையாளர்கள், ஐஸ் வியாபாரிகள் என 1 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்