தீபாவளி பண்டிகை; சொந்த ஊருக்கு சென்ற மக்கள்..வெறிச்சோடிய சென்னை சாலைகள்

கடந்த 3 தினங்களாக சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

Update: 2023-11-12 11:20 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கடந்த 9-ந்தேதி முதல் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களை விட 1,895 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது. கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், மாதவரம், பூந்தமல்லி, கேகே.நகர், தாம்பரம் ரெயில் நிறுத்தம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) தொடர் விடுமுறை கிடைத்ததால் முன்கூட்டியே சென்னையில் இருந்து ஏராளமானோர் பஸ்களில் முன்பதிவு செய்தும், முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்து வந்தனர். இதனால், கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால், கடந்த 3 தினங்களாக சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று சென்னை தாம்பரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்