கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-23 23:14 IST

முற்றுகை போராட்டம்

அரியலூர் மாவட்டம், பிள்ளைபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் ஏரியை 23 குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வீடு, குடிசை கட்டி வசித்து வந்தனர். அவர்களை கடந்த ஆண்டு அப்புறப்படுத்தி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட 23 குடும்பங்களில் 5 குடும்பங்களுக்கு மட்டும் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்ற 18 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லையாம். இதனால் அவர்கள் அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 18 குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு பிள்ளைபாளையம் ஊராட்சி பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி முத்துசேர்வாமடம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 5 குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், எங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அதுவும் எங்களுக்கு பிள்ளைபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இடம் வழங்க வேண்டும். மேலும் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் கூறுகையில், தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் முறையாக மனு கொடுங்கள். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்