வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

ஜோலார்பேட்டை அருகே பாதை வசதி செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

Update: 2022-08-13 18:02 GMT

ஜோலார்பேட்டை அருகே பாதை வசதி செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

பாதை வசதி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி, அம்மையப்பன் நகர் கிராமத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு வர வேண்டுமானால் கட்டேரியிலிருந்து, லாரி ஷெட் பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் மற்றும் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ரெயில்வே பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும்.

மழைக்காலங்களில் இரண்டு பாலத்தின் அடியிலும் மழை நீர் குளம் போல் தேங்கி விடுவதால், 3 கிலோமீட்டர் முதல் 6 கிலோமீட்டர் வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் லாரி ஷெட் பகுதியில் உள்ள ரெயில்வே பாலத்தை மேம்பால சாலையாக அமைக்க வேண்டும் என கடந்த 40 வருடங்களாக இங்குள்ள பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருப்பு கொடி ஏற்றினர்

இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது. ஆனால் இதுகுறித்து பலமுறை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிருப்திக்குள்ளான பொதுமக்கள் நாளை (திங்கட்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டேரி கிராமத்தில் குடியிருப்புகளின் மீது கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் ரவிமா ராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட வருவாய் துறையினர் கட்டேரி கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்ற தாசில்தார் சிவப்பிரகாசம் தற்போதைக்கு இரண்டு ரெயில்வே தரைப்பாலத்திலும் மழை நீர் தேங்கி நிற்காமல் கால்வாய் அமைக்க கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று, இது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து பொதுமக்கள் குடியிருப்புகளின் மீது கட்டப்பட்ட கருப்பு கொடியை அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்