பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்
ஆடி அமாவாசையையொட்டி பேரூர் படித்துறையில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பேரூர்
ஆடி அமாவாசையையொட்டி பேரூர் படித்துறையில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளின் கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசை நாளில் கோவையில் உள்ள பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையோரம் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
பசுக்களுக்கு தீவனம்
அதிகாலை முதலே வர தொடங்கிய பொதுமக்கள் நொய்யல் ஆற்றங்கரையின் படித்துறையில் இருபுறமும் ஆங்காங்கே அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறிகள், எள் சாதம் ஆகியவற்றை படைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் எள் சாதத்தை பிண்டமாக பிடித்து, காகங்களுக்கு வைத்தனர். மேலும் நொய்யல் ஆற்று நீரில் கரைத்து நீராடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து பசு மாடுகளுக்கு அகத்தி கீரை மற்றும் படித்துறையில் அமர்ந்திருந்த சாதுக்கள், ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதோடு குலம் செழிக்கும் என்பது நம்பிக்கை ஆகும். தொடர்ந்து அவர்கள் பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.
போக்குவரத்து மாற்றம்
இந்த நிகழ்வையொட்டி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் இருபுறமும் புதிது, புதிதாக கடைகள் போடப்பட்டு இருந்தன. மேலும் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வர தொடங்கியதால் காலை 8 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதியில் இருந்து பேரூர் வழியாக வரும் வாகனங்கள், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாகவும், காந்திபுரம் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி வரும் வாகனங்கள், பேரூர் தமிழ் கல்லூரி வழியாக திருப்பி விடப்பட்டது.
மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.