புத்தக கண்காட்சியில் மக்கள் வெள்ளம் அலைமோதல்

கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. மாணவ-மாணவிகள் பெற்றோருடன் திரண்டு வந்து பார்வையிட்டனர்

Update: 2022-12-18 18:45 GMT

கள்ளக்குறிச்சி

புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட நூலகத்துறை சார்பில் கள்ளக்குறிச்சியில் உள்ள சென்னை பைபாஸ் திடலில் கல்லை புத்தகத்திருவிழா என்ற பெயரில் புத்தக கண்காட்சி கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 100 புத்தக பதிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் உணவு வகைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையே பேச்சு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

அடுப்பில்லா சமையல் போட்டி

அந்த வகையில் விழாவின் 4-வது நாளான நேற்று காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது.

தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 3.30 மணிவரை பேச்சரங்கம், மாலை 5 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், 5 மணி முதல் மாலை 6 மணி வரை திண்டுக்கல் மாயாஜால நிபுணர் அசோக்கின் மாயாஜால நிகழ்ச்சியும், தெளிந்த நல்லறிவு வேண்டும் என்ற தலைப்பில் பேச்சரங்கமும், மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரை கலைமணி ஞானசம்பந்தம் தலைமையில் படிப்பது சுகமா? சுமையா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் அலைமோதல்

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் புத்தக கண்காட்சியில் வழக்கத்தை விட மக்கள் வெள்ளம் அலைமோதியது. மாணவ-மாணவிகள் பெற்றோருடன் திரண்டு வந்து கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்