கணபதி அக்ரஹாரம் பாலக்கரையில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் கணபதி அக்ரஹாரம் பாலக்கரையில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அய்யம்பேட்டை:-
விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் கணபதி அக்ரஹாரம் பாலக்கரையில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விபத்துகள்
திருவையாறு - கும்பகோணம் நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்டு கருங்கற்கள் ஏற்றிய லாரிகளும், கொள்ளிடம் ஆற்றின் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிய லாரிகளும் இந்த சாலை வழியாக அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த நெடுஞ்சாலையில் கணபதி அக்ரஹாரம் பாலக்கரை பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது.
எதிரில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அமைந்துள்ள இந்த வளைவு பகுதியில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த வளைவுக்கு அருகிலேயே அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சந்திப்பு சாலையும் உள்ளது.
எதிர்பார்ப்பு
இதனால் மூன்று பகுதிகளில் இருந்தும் வரும் வாகனங்களால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.