குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.