முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திட்டக்குடியில் குடிநீர் வினியோகத்துக்காக உள்ள ஒரு ஆழ்துளை கிணறுக்கு 4 வார்டு மக்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது. இதனால் இருபிரிவினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-26 18:45 GMT

திட்டக்குடி, 

சுகாதாரமற்ற குடிநீர்

திட்டக்குடி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் 1 மற்றும் 2-வது வார்டுக்கு உட்பட்ட இளமங்கலம் பகுதிக்கும், 3 மற்றும் 14-வது வார்டு மணல்மேடு பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் 14-வது வார்டில் உள்ள மணல்மேடு என்ற இடத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 மற்றும் 14-வது வார்டு பகுதிக்கு வினியோகம் செய்வதற்காக உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் குடிநீர், சுகாதாரமற்ற முறையில் வருவதாக நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை போராட்டம் அறிவிப்பு

இதையடுத்து, ஏற்கனவே 1,2 வார்டு பகுதிகளின் குடிநீர் வினியோகத்துக்காக பயன்படுத்தும் ஆழ்துளை கிணற்றில் இருந்து, 3 , 14-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீர் 4 வார்டுகளுக்கும் போதுமானதாக இல்லை. அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் 1, 2 வார்டு பகுதி மக்கள் நாளை (அதாவது நேற்று) நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று நேற்று முன்தினம் அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை 10 மணிக்கு பிரச்சினைக்குரிய ஆழ்துளை கிணறு அமைந்துள்ள இடத்துக்கு திரண்டு வந்தனர்.

இதுபற்றி அறிந்த தாசில்தார் ரவிச்சந்திரன் நேரில் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், தாலுகா அலுவலகம் வாருங்கள் குடிநீர் பிரச்சினை தொடர்பாக சுமூகமாக பேசி தீர்வு காணலாம், தற்போது போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார். இதையேற்று பொது மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

மேலும், நகராட்சி சார்பில் பழைய முறைப்படியே ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த 3 மற்றும் 14-வது வார்டு மக்கள் தங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிடுவார்கள் என்று எண்ணி, நேற்று காலை 10.50 மணிக்கு மேல், விருத்தாசலம்-தொழுதூர் சாலையில் மணல்மேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நகராட்சி கவுன்சிலர் ரெங்க சுரேந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுபற்றி அறிந்த திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் நேரில் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் தங்களுக்கு சுகதாரமான குடிநீர் தொடர்ந்து வழங்குவதுடன், தட்டுப்பாடின்றி முறையாக வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மோதல் உருவாகும் சூழல்

திட்டக்குடி நகராட்சியில் ஒரு ஆழ்துளை கிணற்றில் 4 வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

அதோடு, புதிய ஆழ்துளை கிணறு அமைப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளாமல், தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால் குடிநீர் பிரச்சினை மூலம் இருபிரிவினரிடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படும் முன், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒரே ஒரு ஆழ்துளை கிணறுக்கு 4 வார்டுகளை சேர்ந்த மக்கள் போட்டாபோட்டி போட்டு, முற்றுகை, சாலை மறியல் என்று போராட்டங்களை அறிவித்து வருவது திட்டக்குடி நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்