சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-01 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள 3-வது வார்டில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் பெய்த மழையால், கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இதில் சில வீடுகளுக்குள் மழை நீருடன், கழிவுநீரும் புகுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரசம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சங்கராபுரம்-புதுப்பாலப்பட்டு சாலையில் நேற்று மாலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தரக்கோரி கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்