குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-12 18:45 GMT

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் காலனி பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றக்கூடிய மின் மோட்டார் திடீரென பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணியளவில் காலி குடங்களுடன் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார், கண்டம்பாக்கம் கிராமத்திற்கு விரைந்து சென்று அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்வதாக போலீசார் கூறியதன்பேரில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கண்டம்பாக்கம்- கோவிந்தாபுரம் கிராம சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்