மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டையில் இரவில் வாலிபரை பாம்பு கடித்ததால், செத்த பாம்புகளுடன் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சார வசதி இல்லை
புதுக்கோட்டை அருகே செம்பாட்டூர் ஊராட்சியில் வள்ளிநகரில் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெரு விளக்கு வசதியும், வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி கோரியும் அப்பகுதி பொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பழனிவேலின் மகன் மாரிமுத்து (வயது 20) என்பவரை பாம்பு கடித்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் பாம்பு கடித்து வாலிபர் ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது.
பாம்புகளுடன் சாலை மறியல்
இந்த நிலையில் மின்சார வசதி இல்லாததால் அடிக்கடி இது போன்ற சம்பவம் நடைபெறுவதாகவும், தங்களுக்கு மின்சார வசதி உள்பட அடிப்படை வசதி கோரி மாரிமுத்துவை கடித்த பாம்பு, மற்றொரு பாம்பு என 2 பாம்புகளுடன் அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று புதுக்கோட்டையில் தாசில்தார் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த 2 பாம்புகளும் செத்திருந்தன. அதனை சாலையில் போட்டு அதன் முன்பாக பொதுமக்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். பாம்புகளுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ``மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் தெரிவதில்லை. இரவில் அச்சத்துடன் வசிக்க வேண்டியது உள்ளது. அதனால் தெரு விளக்கு வசதி, வீடுகளுக்கு மின் இணைப்பு உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்'' என்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் வசிப்பதாகவும், அவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் செத்த பாம்புகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டையில் பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.