ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சோளிங்கர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே தப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி. இவர் தப்பூர் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடையை தன் சொந்த கிராமமான கோவிந்தாங்கல் கிராமத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தப்பூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரக்கோணம், வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
தலைவர் வீட்டில் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதை கண்டித்தும், தப்பூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாததை கண்டித்தும் கோஷமிட்டனர். சுமார் 4½ மணி நேரம் சாலை மறியல் நடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி பொறியாளர் குமரவேல், பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் அ.ம.கிருஷ்ணன் மற்றும் சோளிங்கர், பாணாவரம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.