வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலியானதை தொடர்ந்து, வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலியானதை தொடர்ந்து, வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுயானை தாக்கியது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுனிதா(வயது 42). இவர்களது மகள் அஸ்வதி(20). இவர் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்.(சி.ஏ.) 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அஸ்வதி கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாயார் சுனிதாவுடன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டுயானை திடீரென அவர்களை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சுல்தான்பத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுனிதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் பந்தலூரில் இருந்து சேரம்பாடி சுங்கம் வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் கோரஞ்சால் என்ற இடத்தில் கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் சாலையோரம் உள்ள மூங்கில்கள் மற்றும் முட்புதர்களை அகற்ற வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், படுகாயம் அடைந்த கல்லூரி மாணவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், புதிதாக தெருவிளக்குகள் பொருத்த வேண்டும், காட்டுயானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்து வந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முகமதுகுதரத்துல்லா, வன அலுவலர் ஓம்கார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், செல்வராஜ், வனச்சரகர் அய்யனார், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மூங்கில்கள் மற்றும் முட்புதர்களை அகற்றவும், புதிய தெருவிளக்குகள் அமைக்கவும், அகழி வெட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவது குறித்து கலெக்டருக்கு தெரிவிக்கப்படும். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவிக்கு வனத்துறையில் தற்காலிக பணி வழங்கப்படும். நிரந்தர பணி வழங்குவது குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி சேரம்பாடி,எருமாடு, அய்யன்கொல்லியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.