வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொள்ளாச்சியில் மக்னா யானையை பிடிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மக்னா யானையை பிடிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் முற்றுகை
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடித்து கொண்டு வரப்பட்ட மக்னா யானை டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த யானை அங்கிருந்து பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து பிடித்து மானாம்பள்ளியில் விடப்பட்ட யானை, கடந்த ஏப்ரல் மாதம் சேத்துமடை பகுதிக்கு வந்தது. தற்போது அந்த யானை சரப்பதி பகுதியில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரங்களில் வந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற கோரி பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் உதவி வன பாதுகாவலர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கும்கியாக மாற்ற வேண்டும்
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 4 மாதங்களாக மக்னா யானை சுற்றித்திரிந்து வருகிறது. தென்னை, மா, வாழை மற்றும் பந்தல் காய்கறிகளை சேதப்படுத்தி உள்ளது. ரூ.4 லட்சம் செலவு செய்து போடப்பட்ட கம்பி வேலியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைத்து விட்டது. பயிர்களை சேதப்படுத்திய யானை, தற்போது குடியிருப்புக்குள் வர தொடங்கி விட்டது. வனத்துறையினர் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை.
யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அது வரும் போது பொதுமக்களுக்கு தகவல் கொடுப்பதில்லை. கும்கி யானையை கொண்டு வந்து கட்டி வைத்து எந்த பயனும் இல்லை. மக்னா யானையை பிடிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஏதாவது உயிர்சேதம் ஏற்பட்ட பிறகு தான் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?. அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட்டால் திரும்ப வரக்கூடும். எனவே, யானையை பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சரளப்பதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
உரிய பாதுகாப்பு
இதையடுத்து உதவி வனபாதுகாவலர் செல்வம் கூறுகையில், மக்னா யானையை வனத்துறையினர் கண்காணிப்பதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இன்றே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக ஆட்களை நியமித்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். யானை வருகிற பாதை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். யானையை பிடிக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனுமதி கிடைத்ததும் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது வனச்சரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர். மேலும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.