பரமத்திவேலூர்:
பரமத்தியில் கடந்த சில தினங்களாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள பள்ளி வாகன டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் 2 தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. இந்த 2 வீடுகளிலும் பணமோ, பொருட்களோ கொள்ளை போகாததால் சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என தெரிகிறது.
எனினும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த தொடர் திருட்டு முயற்சி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்ககோரி பரமத்தி நகர பா.ஜ.க. சார்பில் பரமத்தி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.