வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்த 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அபராதம் கேட்டு மிரட்டல்
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களான அகமது ஜபீர், மைதீன், சலீம், கைசர் ஆகிய 4 பேரும் ஜீப்பில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அவினாசிக்கு திரும்பி சென்றனர். திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில், செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் என்ற நம்பர் பிளேட் பொருத்திய சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரின் வெளியே 2 பேர் நின்று கொண்டு, அகமது ஜபீர் உள்பட 4 பேர் வந்த ஜீப்பை நிறுத்தினர். பின்னர் அந்த நபர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எனக்கூறி ஜீப்பில் வந்தவர்களிடம் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆனால் அவர்களது நடவடிக்கையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அபராதத்தை செலுத்த மறுத்தனர். இதனால் அந்த நபர்கள், மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர்கள், தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலி அதிகாரிகள்
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு சொகுசு காருடன் நின்றிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரையும் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் போலி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் என்பதும், வாகன ஓட்டிகளிடம் அதிகாரிகள் எனக்கூறி அபராதம் வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மதுரை கோ.புதூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31), திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி இந்திராநகரை சேர்ந்த சிவக்குமார் (45) என்பதும் தெரியவந்தது. இதில், சிவக்குமார் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரியின் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது காரை பயன்படுத்தி இதுபோன்று வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமார், சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.