சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் - காஞ்சீபுரம் மாநகராட்சி
சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
70 டன் குப்பைகள் சேகரம்
கோவில் நகரம், பட்டு நகரம் மற்றும் தொழிற்சாலை நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 டன் குப்பை சேகரமாகிறது.
இதில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளதாக தெரிகிறது. குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது.
மாநகராட்சியில் உள்ள குப்பைகளை சேகரிக்க நாள்தோறும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்கள் சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் பணிகள் மேற்கொண்டு தூய்மையை உருவாக்கும் நோக்கத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது காஞ்சீபுரம் புறநகர் பகுதிகளில் பெரும் வளர்ச்சி கொண்டு வரும் நிலையில், வணிக வளாகங்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
அபராதம்
முதல் கட்டமாக குடியிருப்பு பகுதிகளில் அருகில் உள்ள குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு, அங்கு மா கோலமிட்டு, வீடுகள் தோறும் பணியாளர்கள் நேரில் சென்று தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் வணிக வளாகங்களில் சேரும் குப்பைகளை சாலையில் வீசி வருவதை தடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வணிக வளாகங்களில் நுழைவு வாயில் அருகே குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வைத்திருக்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்கள் நேரில் சென்று அவற்றை பெற்று கொள்வார்கள் எனவும், இதை மீறும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வழிகாட்டு முறைகளை தெரிவித்துள்ளனர்.