தடை காலத்தில் விற்பனையில் ஈடுபட்ட 5 உரக்கடைகளுக்கு அபராதம்

தடை காலத்தில் விற்பனையில் ஈடுபட்ட 5 உரக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-05-16 18:12 GMT

அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் குழு சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது, உர விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட பின், இது தொடர்பாக அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரியலூர் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் திருமானூர் வட்டாரத்தில் உள்ள 3 தனியார் உரக்கடைகளுக்கு, ஒவ்வொரு கடைக்கும் அபராதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தற்போது தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 2 தனியார் உரக்கடைகள் மீது ஜெயங்கொண்டம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் அபராதமாக ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதில் 5 உரக்கடைகளுக்கு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. செந்துறை குற்றவியல் கோர்ட்டில் மேலும் 1 தனியார் உரக்கடை மீது வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்