தனியார் பஸ்கள் உள்பட 12 வாகனங்களுக்கு அபராதம்

பொள்ளாச்சியில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்திய தனியார் பஸ்கள் உள்பட 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2023-01-25 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்திய தனியார் பஸ்கள் உள்பட 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நவீன கருவி மூலம் கணக்கீடு

பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து கோவை, திருப்பூர், பழனி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதாக புகார் வந்தது.

அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டு உள்ள ஏர்ஹாரன் ஒலி அளவு, நவீன கருவி மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி, மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.

அபராதம் விதிக்க நடவடிக்கை

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:-

பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களின் ஒலி அளவு, துல்லியமாக நவீன கருவி மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பாலக்காடு ரோட்டில் லாரி உள்ளிட்ட வாகனங்களிலும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 7 தனியார் பஸ்கள், 3 கனரக சரக்கு வாகனங்கள், 2 மினி பஸ்கள் உள்பட 12 வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஏர்ஹாரன்களில் ஒலி அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அந்த வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் அபராதம் நிர்ணயம் செய்யப்படும். மேலும் 20 வாகனங்களில் இருந்து ஏர்ஹாரன் அகற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்