விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
ராசிபுரம் அருகே விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன் மற்றும் முருகன் ஆகியோர் தலைமையில் ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலாவில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி, சக்திவேல், நித்தியா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் சொந்த வாகனங்களான 2 கார்கள் வாடகைக்கு இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் 2 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது என 2 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. விதிமுறை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.