பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்
மயில்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயில்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயில்கள் கூட்டம்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள் சில கோவில்களில் வளர்ப்பு பிராணிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும். ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது காக்கை,குருவிகளுக்கு நிகராக கிராமங்கள் தோறும் பலநூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன.
பல்லி, ஓணான், தவளை, சிறுபாம்புகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வாழும் மயில்கள் தானியங்களையும் கொத்தித் தின்று வருகின்றன.
தானியங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, தட்டைப் பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றையும் உணவாக உட்கொள்ளும். மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் மயில் கூட்டம் அபரிமிதமாக பெருகிவிட்டது.
பயிர்களை சேதப்படுத்துகின்றன
குறிப்பாக கிராமங்களில் காக்கை, குருவிகளை காட்டிலும் மயில்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. புதர்களுக்குள்ளும், ஆள் நடமாட்டமில்லாத இடங்களிலும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.
முன்பு நரிகள் அதிகமாக இருந்ததால் அவைகள் மயில்கள் இடும் முட்டைகளை தின்று விடும்.ஆனால் தற்ேபாது நரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இதனால் மயில்களின் பெருக்கம் அதிகமாகி மதிய நேரங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்களில் சென்று ஓய்வெடுத்துவிட்டு காலை,மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் படையெடுத்து சென்று பயிர்களை கொத்தி சேதப்படுத்துவதுடன் பயிர்களை மிதித்தும் சேதம் செய்வதாக விவசாயிகள் கவலை ெதரிவித்தனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "கடந்த 10வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் 3 முதல் 4 மயில்களே செல்லும். ஆனால் தற்போது அதிக பெருக்கத்தால் ஒரு மயில் கூட்டத்தில் 10 முதல் 15 மயில்கள் செல்கின்றன. மக்காச்சோளம், சோளம், தட்டை உள்ளிட்ட பயிர்களை கொத்தி தின்பதோடு கால்களால் மிதித்தும் சேதம் செய்து விடுகிறது. தவிர சோளம், தட்டை உள்ளிட்ட விதைகளை விதைத்து அது முளைவிடும் தருணத்தில் வேரோடு பிடிங்கித் தின்றுவிடுகின்றன.
கட்டுப்படுத்த கோரிக்கை
முன்பெல்லாம் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் மயில்கள் தற்போது விரட்டினால் கூட ஓடுவதில்லை. பட்டாசுகளை வெடித்தாலும் சாதாரணமாக தலையை தூக்கி பார்த்துவிட்டு பயிர்களை கொத்துவதிலேயே குறியாக இருக்கின்றன.
ஏற்கனவே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் நாங்கள் தற்போது இந்த மயில் கூட்டம் பயிர்களை சேதம் செய்வதால் செய்வதறியாது தவிக்கிறோம்.
எனவே மயில்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.