கடும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்

கிணத்துக்கடவு அருகே, கடும் வெயிலில் சாலையோரம் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-03-27 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே, கடும் வெயிலில் சாலையோரம் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தியுள்ளனர்.

பயணிகள் நிழற்குடை

கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர், பெரும்பதி பிரிவு, பாலார்பதி, ரெங்கே கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளுக்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதியில் இருந்து தினசரி 3 அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் சென்று வரும் வழியில் மாலை கோவில் பிரிவு, மூலக்கடை பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டு உள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்ட பகுதிகளில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடும் அவதி

குறிப்பாக முத்து கவுண்டனூரை அடுத்த பெரும்பதி பிரிவு பகுதியில் இருந்து பெரும்பதி, மலசர்பதி மக்கள் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்வார்கள். அவர்கள் மட்டுமின்றி பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் பெரும்பதி பிரிவில் தற்போது நிலவும் கடும் வெயிலில் சாலையோரம் நின்று பஸ் ஏறி வருகின்றனர். அவர்கள் அமர கூட இருக்கை வசதி இல்லை. இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விபத்து அபாயம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக பெரும்பதி பிரிவில் பயணிகள் நிழற்குடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் மழை மற்றும் வெயில் நேரங்களில் திறந்த வெளியில் நின்று சிரமமடைந்து வருகிறோம். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே எங்களது சிரமத்தை போக்க பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்