மேற்கூரை வசதி இல்லாததால் மழையில் நனையும் பயணிகள்
ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் மேற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் மழையில் நனைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் மேற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் மழையில் நனைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மேற்கூரை வசதி
பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் கடந்த 1932-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் செயல்பட தொடங்கியது. மேலும் மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதைதவிர ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் ரெயில் மட்டும் நின்று செல்கிறது. இதற்கிடையில் ரெயில் நிலைய நடை மேடையில் மேற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் மழையில் நனைய வேண்டிய உள்ளது. மேலும் மழைக்கு ஒதுக்கி நின்று விட்டு ரெயில் வந்த பிறகு ஓடி வந்து ஏற வேண்டி உள்ளதால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
அடிப்படை வசதிகள்
ஆங்கிலேயர் காலத்தில் ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சரக்கு முனையத்தில் இருந்து காடம்பாறை அணை கட்டுவதற்கு மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு சரக்கு முனையம் இல்லை. ரெயில்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. மேலும் இந்த ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்லவில்லை. அதன்பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்கிறது. ஆனால் நடை மேடையில் மேற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பாலக்காடு கோட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே மேற்கூரை அமைத்து பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த வழியாக செல்லும் சென்னை, அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.