இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாஸ்கு திருவிழா
காரங்காடு கிராமத்தில் இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாஸ்கு திருவிழா நடந்தது.
தொண்டி,
தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற புதுமை புகழ் தூய செங்கோல் மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கு பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 128-ம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி செங்கோல் மாதா ஆலயத்தில் பாதிரியார் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி யை காரங்காடு பங்குத்தந்தை அருள் ஜீவா, பாதிரியார் ஜான்சன் ஆகியோர் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கபிரியேல் நாதர் சுவாமி கலையரங்கத்தில் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காரங்காடு பங்கு தந்தை அருள் ஜீவா தொடங்கி வைத்தார். இதில் இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாடுகளின் பாஸ்கு காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொது மக்களால் நடித்துக் காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியை காண ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறை மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் வின்சென்ட் அமல்ராஜ் ஆர். எஸ்.மங்கலம் மறை வட்ட அதிபர் கிளமெண்ட் ராஜா, முத்துப்பட்டினம் பங்கு தந்தை அற்புத அரசு, நகரிக்கத்தான் பங்குத்தந்தை சூசை மிக்கேல், பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை ரீகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.