மாரத்தான் போட்டியில் பங்கேற்றஎன்ஜினீயரிங் மாணவர் மாரடைப்பால் சாவு

மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2023-07-23 20:47 GMT


மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மாரத்தான் போட்டி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்த தான தினத்தையொட்டி, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போட்டிைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளை சேர்ந்த 4500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியில், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார் (வயது 21) என்ற மாணவரும் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். இந்தநிலையில் மாரத்தான் போட்டி முடிவடைந்த நிலையில், அவர் சக மாணவர்களுடன் பேசி கொண்டிருந்தார். பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்ற மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற தினேஷ்குமார் அங்கு திடீரென மயங்கி விழுந்தார்.

உயிரிழப்பு

இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட தினேஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் பரிதாபமாக இறந்தார்.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் உயிரிழந்தது ஏன்?

இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் கூறுகையில், மாணவர் தினேஷ்குமார் மாரத்தான் போட்டியில் பங்கேற்று போட்டி முடிவடைந்த நிலையில் அவரது நண்பர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். கழிவறைக்கு சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு, ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் குறைவாக இருந்தது. உடனடியாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை சுவாசமும் வழங்கப்பட்டது. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்