''நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உறுதியேற்கின்ற மாநாடாக அமையும்''

சேலம் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உறுதியேற்கின்ற மாநாடாக அமையும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-08-27 18:44 GMT

செயல்வீரர்கள் கூட்டம்

புதுக்கோட்டை சிப்காட் அருகே வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம், பதாகைகள் வைக்க வேண்டாம் என கூறியிருந்தேன். அதனை முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பின்பற்றியுள்ளீர்கள்.

இளைஞர் அணி முதன்மையானது

கட்சியில் பல்வேறு அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதன்மையானது. இளைஞர் அணியில் உழைத்தால் பலன் உண்டு. சமீபத்தில் அ.தி.மு.க. கட்சியினர் ஒரு மாநாடு நடத்தினர். ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டு வருகிறார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படாத காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் பற்றி எரிகிறது. முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்ததன் பேரில் மணிப்பூர் மாநில வாள்வீச்சு வீரர்கள் 18 பேர் தமிழகத்திற்கு வந்து பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல்

இந்தியாவில் எங்கு சென்றாலும் தி.மு.க.வை பிரதமர் மோடி திட்டுகிறார். மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் ஆகி என்ன செய்தீர்கள். ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி ஆகும். பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள முதல் அடியாகும். மத்திய அரசின் வரவு, செலவு கணக்கை சரிபார்த்ததில் சி.ஏ.ஜி. அறிக்கையில் பா.ஜ.க.வின் ஊழல் வெளியில் வந்துள்ளது. பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க.வையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கான நேரம் தான் வருகிற நாடாளுமன்ற தேர்தல்.

சட்டமன்ற தேர்தலில் 2021-ம் ஆண்டு அடிமைகளை விரட்டியடித்ததை போல, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் விரட்ட நேரம் வந்துவிட்டது. இதற்கு நாம் உறுதியேற்கின்ற மாநாடு சேலம் இளைஞர் அணி மாநாடு. இதுவரை இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என வரலாறு படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில மாநாட்டு நிதியாக ரூ.1 கோடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இளைஞர் அணி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டன.

அமைச்சர்கள்

கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில், முத்துராஜா எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்