சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி

எருமாடு பஜாரில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2022-12-06 18:45 GMT

பந்தலூர், 

எருமாடு பஜாரில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

நடைபாதை வசதி

பந்தலூர் அருகே எருமாடு பஜாரில் இருந்து அரசு பள்ளி சந்திப்பு வழியாக அய்யன்கொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக சுல்தான்பத்தேரியில் இருந்து கேரள அரசு பஸ்களும், கூடலூரில் இருந்து அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் எருமாட்டில் இருந்து ஏராளமான தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பஜார் வழியாக நடந்து சென்று வருகின்றனர். அப்பகுதியில் நடைபாதை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால், மாணவர்கள் காத்திருந்து செல்லும் நிலை காணப்பட்டது. இதனால் நடைபாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தடுக்க வேண்டும்

இதைதொடர்ந்து சேரங்கோடு ஊராட்சி சார்பில், எருமாடு பஜார் பகுதியில் சாலையோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே நடைபாதை மீது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால், மாலை நேரங்களில் விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எருமாடு பஜாரில் சாலையோரம், நடைபாதையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, சாலையோரம் மற்றும் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்