வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கிய காட்டுயானை
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை காட்டுயானை அடித்து நொறுக்கியது.
சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (வயது 48). இவர், அங்குள்ள தனியார் தேயிலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தார். அப்போது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காரை பார்வையிட்டு சென்றனர். இந்த பகுதியில் யானையின் கால் தடம் இருப்பதால் காரை காட்டுயானை அடித்து நொறுக்கியுள்ளது தொியவந்தது என்று வனத்துறையினர் கூறினர்.