அரசுபள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை அவதூறாக பேசியதாக உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-25 18:45 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை அவதூறாக பேசியதாக உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 670 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சிவா என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஆலங்காயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கபடி போட்டிக்காக மாணவ மாணவிகளை அவர் அந்த பள்ளிக்சகு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு சரியாக விளையாடாத காரணத்தினால் மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் உடற்கல்வி ஆசிரியர் அவதூறாக பேசியதை கூறியுள்ளனர்.

முற்றுகை

இது சம்பந்தமாக பெற்றோர்கள் நேற்று உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்பும் போது என்ன பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது போன்ற செயலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வநத மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடேசபெருமாள் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

உடற்கல்வி ஆசிரியர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்