வல்லம் அரசு பள்ளியில் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு
மாணவர்களை போலீசார் தாக்கியதாக கூறி வல்லம் அரசு பள்ளியில் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
வல்லம்
மாணவர்களை போலீசார் தாக்கியதாக கூறி வல்லம் அரசு பள்ளியில் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
ஆசிரியை மீது கல்வீச்சு
தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6- வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசியர் உள்பட 30ஆசிரியர்கள் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் பள்ளி மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாதவர் வீசிய கல் அவர் தலையில் பட்டுள்ளது. இதில் ஆசிரியை தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது.
மாணவர்களிடம் விசாரணை
இந்த தகவல் அறிந்து வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போலீசார் சிலர் வந்து 15 மாணவர்களை பள்ளியில் உள்ள அறையில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை போலீசாரால் விசாரணை நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி அளவில் திரண்டனர்.
அப்போது தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் வல்லம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக வந்திருந்தார். அவர் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்து கொண்டிருந்தனர்.
பெற்றோர் திரண்டனர்
மேலும் பள்ளிக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்தனர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சிலரை முற்றுகையிட்டு எவ்வாறு போலீசார் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை விசாரணை என்ற பெயரில் தாக்கலாம் என கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை போலீசார் அடிக்கவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் கூறுகையில்,
வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை மீது கல் வீசியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பள்ளிக்கு வந்து சில மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்ததில் மாணவர்களை, போலீசார் தாக்கியது போன்ற காட்சிகள் பதிவாகவில்லை.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் பேசி புகாரை வாபஸ் பெற நடவடிக்கை மெற்கொளவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.