மேரக்காய் விளைச்சல் குறைந்தது
பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கோத்தகிரியில் மேரக்காய் விளைச்சல் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கோத்தகிரியில் மேரக்காய் விளைச்சல் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மலை காய்கறிகள்
கோத்தகிரி பகுதி மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதை நம்பி சிறு விவசாயிகள், தேயிலை தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல், விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாற்று விவசாயமாக தங்களது விளைநிலங்களில் கொய் மலர், காளான், ஸ்ட்ராபெர்ரி பழம், மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். இருப்பினும், வனவிலங்குகள் தொல்லை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, விதை, உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் ஆகிய சிக்கல்கள் உள்ளன.
கொடிகள் சேதம்
இதை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். கோத்தகிரி அருகே நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிட்டு உள்ளனர். இந்தநிலையில் கடந்த மாதம் முதல் கோத்தகிரி பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காய்கறி தோட்டங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் மேரக்காய் தோட்டங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மேரக்காய் கொடிகள் சேதமடைந்தன. இதனால் மேரக்காய் விளைச்சல் கணிசமாக குறைந்து உள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக உள்ளது. இருப்பினும், மேரக்காய் கொடிகள் சேதமடைந்து, விளைச்சல் குறைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.