ஊருக்குள் உலாவரும் சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்

ஊருக்குள் உலாவரும் சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்

Update: 2022-11-03 10:38 GMT

பல்லடம்

பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள்அச்சம் அடைந்துள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை

வீட்டில் வளர்க்கும் விலங்குகள் ஊருக்குள்ளும், காட்டில் வசிக்கும் விலங்குகள் வனப்பகுதிக்குள்ளும் இருக்க வேண்டும். இரண்டும் இடம் பெயர்ந்தால் ஒன்றால் மன்றொன்றுக்கு ஆபத்து. எனவே அந்தந்த எல்லைக்குள் அவை இருப்பதே நன்று. வனப்பகுதிக்குள் வசிக்கும் விலங்குகள் எதுவானாலும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தால் விவசாய சாகுபடி பயிர்கள் சேதமாகும். கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. அதன்பின்னரே அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தற்போது பல்லடத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

பல்லடம் அருகே கரடிவாவி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகிறார்கள். இந்த நிலையில் அங்குள்ள நந்தவன தோட்டம் என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்ததை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இது குறித்து அந்த பகுதியில் குடியிருப்பவர்களிடம் கூறி எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவரை வழங்கி உள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து வீட்டைவிட்டுவௌியே வரவே தயங்குகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

கரடிவாவி நந்தவனம் தோட்டத்தில் பெரிய குட்டை ஒன்று உள்ளது. அங்கு ஏற்கனவே நரி, உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் சிறுத்தை ஒன்று அந்தப் பகுதியில் நடமாடியது அருகில் உள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் சிறுத்தையின் உருவம் தெளிவாக பதிவாகியுள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து சிறுத்தையைப் பிடித்து சென்று வனவிலங்குகள் உள்ள காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏனெனில் தற்போது பல்லடம், கரவாவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுத்தீவனமான சோளத்தட்டு விதைத்துள்ளனர். தற்போது சோளத்தட்டு 6 அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்த சோளத்தட்டுக்குள் சிறுத்தை பதுங்கி கிடந்தால் தெரியாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அங்கு நடமாடியது சிறுத்தையா? அல்லது நாயா? என்பது குறித்து சந்தேகம் உள்ளது. விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்