பண்ருட்டி நகராட்சி ஆணையாளருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை உறுதி
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பண்ருட்டி நகராட்சி ஆணையாளருக்கு விதிக்கப்பட்ட 1½ ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது
கடலூர்
காசோலை வழங்க லஞ்சம்
வேலூர் மாவட்டம் சொக்கலிங்க நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 75). இவர் கடந்த 2002-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்தார். அப்போது மேலப்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடித்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ஒப்பந்ததாரரிடம் மனோகரன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், தனது மகன் பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மூலம் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 3.12.2002 அன்று செந்தில்குமார் லஞ்ச பணத்தை மனோகரனிடம் கொடுத்த போது, அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேல்முறையீடு மனு தள்ளுபடி
இவ்வழக்கு விசாரணை கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மனோகரனுக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து, மனோகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்படி மனோகரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என அறிவித்தது.
இதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் நேற்று மனோகரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.