பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-06-24 18:20 GMT

கரூர் மாநகராட்சி வெங்கமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது கலெக்டர் கூறுகையில், முகாமில் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் பல்வேறு இதர பணியாளர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இலவச காப்பீடு திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டது. முகாமில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய், புற்றுநோய், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குடும்ப நல சிகிச்சை மற்றும் ஆலோசனை, பால்வினை நோய் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், கண் சிகிச்சை, தோல் மருத்துவம், மனநல மருத்துவம், இ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, சித்தா, யோகா மருத்துவம் ஆகிய அனைத்து மருத்துவ வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது, என்றார்.

பின்னர் 45 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 10 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளையும், 44 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தாமோதரன், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன், துணை இயக்குனர் சந்தோஷ்குமார் (சுகாதார பணிகள்), இணை இயக்குநர் (நலப்பணிகள்) சுதர்சனயேசுதாஸ், தனி துணை கலெக்டர் சைபுதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்