கவுந்தப்பாடி அருகே பயங்கரம்: குடிபோதையில் கடப்பாரையால் அடித்து தொழிலாளி படுகொலை
கவுந்தப்பாடி அருகே குடிபோதையில் கடப்பாரையால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே குடிபோதையில் கடப்பாரையால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளர்கள்
கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பழனிச்சாமி வீதியில் ஒரு காலி இடம் உள்ளது. பவானி- கவுந்தப்பாடி மெயின் ரோடு விரிவாக்க பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் தொழிலாளர்கள் இந்த காலி இடத்தில் உள்ள தற்காலிக கொட்டகையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த சசுஜின் (வயது 40), ரமேஷ் (40) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.
கடப்பாரையால் தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த சுஜினுக்கும், ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
தகராறு முற்றியதில் ரமேஷ் அங்கிருந்த கடப்பாரையை எடுத்து சுஜினை அடித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் சுஜின் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
வலைவீச்சு
இதுபற்றி அறிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி, கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த சுஜினின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் உடலை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரமேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.