சேலத்தில் பயங்கரம்: வெள்ளிப்பட்டறை தொழிலாளி வெட்டிக்கொலை-3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-15 23:34 GMT

வெள்ளிப்பட்டறை தொழிலாளி

சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் உதயசங்கர் (வயது 30), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் வந்து பேச்சு கொடுத்தது. பின்னர் சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து அவரை வெட்ட முயன்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்ட உதயசங்கர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் சிறிது தூரம் துரத்தி சென்றது.

வெட்டிக்கொலை

பின்னர் அங்கு உள்ள ஒரு கறிக்கடை முன்பு அந்த கும்பலை சேர்ந்த 3 பேரும் அவரை வழிமறித்து வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம், கை என உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தார்.

அதே நேரத்தில் அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியது. அவர் சரிந்து விழுந்ததை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல், உதவி கமிஷனர் நிலவழகன், பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய உதய சங்கரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இரவு 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

முன்விரோதம்

இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மாலை நேரத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளியை வெட்டிய சம்பவத்தால் 3 ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிக்கட்டி விவகாரத்தில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக உதயசங்கர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தார்.

இது தொடர்பான முன் விரோதத்தால் இந்த கொலை நடந்து இருக்கலாம். இருப்பினும் மர்ம கும்பலை தேடி வருகிறோம். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

வெள்ளி தொழிலாளியின் நண்பரையும் வெட்டிய கும்பல்

வெட்டிக்கொலை செய்யப்பட்ட உதயசங்கருடன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், மற்றொரு நபரும் என 3 பேர் சேர்ந்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் பகுதியில் வெள்ளி வியாபாரியை கடத்தி வெள்ளிக்கட்டி மற்றும் பணம் பறித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் உதயசங்கர் ஜாமீனில் வெளியில் வந்து உள்ளார். ஜாமீனில் வந்தவரை நோட்டமிட்டு கொண்டிருந்த கும்பல் அவரை நேற்று சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளது. உதயசங்கரை வெட்டும் போது அவரது நண்பர் அலெக்ஸ்பாண்டியன் என்பவர் உடன் இருந்து உள்ளார். அவரையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. இதையடுத்து காயம் அடைந்த அவர் நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்ந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, உதயசங்கரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 4 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டினர். இதில் அருகில் இருந்த என்னையும் வெட்டினர். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது என்று கூறினார்.

மேலும் செய்திகள்